தடை செய்யப்பட்ட நாவல்கள் - 2
- மாதவராஜ்
- Apr 27
- 5 min read
Updated: Apr 28

"அமெரிக்காவின் அனைத்து நவீன எழுத்துக்களும் ஒரு புத்தகத்திலிருந்து வந்தவை. அது மார்க் ட்வைன் எழுதிய Adventures of Huckklebery finn. அதற்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு புத்தகம் வரவில்லை' என்று எழுத்தாளர் எர்னஸ்டோ ஹெம்மிங்வே 1935ல் எழுதுகிறார். அமெரிக்காவின் மதிப்பு மிக்க கன்கார்டு நூலகமோ "மூர்க்கத்தனத்தையும், அநாகரீகத்தையும் பேசும் இந்த புத்தகம் சேரிகளுக்குத்தான் லாயக்கு. அறிவும் மரியாதையும் மிக்க மனிதர்களுக்கு ஏற்புடையதல்ல" என்று இந்த நாவல் வெளிவந்த 1885ம் ஆண்டிலேயே தடைசெய்தது. 1902ல் டென்வர் பொது நூலகத்திலிருந்து தடை செய்யப்பட்டது. 1905ல் புரூக்ளினில் உள்ள பொது நூலகம் "இன்றைய இளைய தலைமுறைக்கு மோசமான முன்னுதாரணம் என்றும் கெட்ட நடத்தைக்கு தூண்டுகிறது என்றும்' அறிவித்தது. 1950களில் இன ரீதியான உணர்வுகளைத் தூண்டுவதாக தடை செய்யப்பட்டது. 1990களில் நடந்த சர்வே ஒன்றில் இப்போதும் சர்ச்சைக்குள்ளான புத்தகங்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் 'ஹக்கிள்பெரி ஃபின்னின் தீரச்செயல்கள்' இருப்பது தெரிய வந்திருக்கிறது. இன்றுவரை வகுப்பறைகளில் மாணவர்கள் கைகளில் இந்தப் புத்தகத்தை கொடுப்பதற்கு அமெரிக்கச் சமூகம் வெகுவாக யோசிக்கிறது. 120 ஆண்டுகளாக ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு காரணத்தை முன்வைத்து இந்தப் புத்தகம் தடைசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலக் கட்டத்தின் வாழ்க்கைச் சித்திரங்களை ட்வைன் இந்தக் கதையில் தீட்டியிருக்கிறார். அடிமைகளின் அவலநிலையும், இனவேறுபாடுகளைக் கடந்த நட்பும் 46 அத்தியாயங்களின் அடிநாதமாக இருக்கிறது. மிசிசிபி நதியின் அழகிய வர்ணங்களும், அதன் கரையோரத்து மனிதர்களும் நமக்குள் அலைமோதுகிறார்கள். நாகரீகம் என்ற பெயரில் ஏற்படுகிற சமூக மாற்றங்களுக்கும், உண்மையான விடுதலைக்கும் உள்ள முரண்பாட்டின் தளத்தில் கதாபாத்திரங்கள் அசைகிறார்கள்.
"டாம் சாயரின் தீரச்செயல்கள் (Adventures of Tom Sawyer )' முடிந்த இடத்தில், 'ஹக்கிள்பெரி ஃபின்னின் தீரச்செயல்கள்' கதை ஆரம்பிக்கிறது. அதில் டாமுக்கும், ஹக்கிளுக்கும் பனிரெண்டாயிரம் டாலர் பணம் கிடைப்பதாகவும், இருவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வதாகவும் முடிந்திருக்கும். நீதிபதி தாட்சர் அந்தப் பணத்தை வங்கியில் போட்டு, நாளொன்றுக்கு ஒரு டாலர் பணம் கிடைக்க வழி செய்கிறார். விதவையான டக்ளஸ், ஹக்கிளை பராமரிப்பதாக அழைத்துச் செல்கிறாள். புதுத்துணிகளை வாங்கித் தருகிறாள். டக்ளஸ் சகோதரி மிஸ்.வாட்ஸன் பைபிள் படிக்கச் சொல்லித் தருகிறாள். ஹக்கிற்கு இந்த "ஒழுக்கச் சிறைக்குள்' அடைபட முடியவில்லை. வீடு மரணமடைந்ததைப் போல அசைவற்றிருப்பதாகப் படுகிறது. மனைவியையும், குழந்தைகளையும் பிரிந்து கொடுமையில் வாடும் ஜிம் என்னும் கறுப்பின அடிமை ஒருவன் அங்கு வேலைக்காரனாக இருக்கிறான்.
ஹக்கிடம் இருக்கும் பணத்தை அடைவதற்காக குடிகாரனான அவன் தந்தை முயற்சிக்கிறான். காட்டுப்பன்றியின் இரத்தத்தை சுற்றிலும் சிந்தி உலகுக்குத் தான் செத்துப்போனவனாய் நாடகமாடி கட்டுமரத்தில் தப்பிக்கிறான் ஹக். யாரிடமோ தன்னை விற்க முயற்சி நடப்பது தெரிந்து ஜிம்மும் டக்ளஸ் வீட்டிலிருந்து தப்பித்து ஓடுகிறான். ஜாக்ஸன் தீவில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஊருக்குள் ஹக்கை கொன்றுவிட்டு ஜிம் தப்பித்துவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. பகல்வேளைகளில் நதியோடும், இரவில் அருகில் இருக்கும் டவுனுக்குள் நுழைந்து உணவுக்கு எதாவது ஏற்பாடு செய்தபடியும் பயணம் தொடர்கிறது. நீராவிப்படகில் மூன்று கொள்ளையர்கள் வருகிறார்கள். அவர்களுக்குள்ளேயே மோதல் உருவாகி இரண்டு கொள்ளையர்கள் சேர்ந்து மூன்றாம் கொள்ளையனை கொல்ல முயற்சிக்கிறார்கள். கடைசியில் கவிழும் படகில் மாட்டிக்கொள்கிறார்கள். ஜிம்மும் ஹக்கும் பொழுது விடிவதற்காக நதிக்கரையில் ஒதுங்கி நிற்கிறார்கள். மன்னன் சாலமனைப் பற்றிப் பேசுகிறான் ஹக். உலகத்திலேயே அபத்தமான முட்டாள் அவன் என்று சொல்கிறான் ஜிம். குழந்தை முழுவதுமாக வேண்டும் என்பதுதான் வழக்கு என்றும் அதை விட்டு விட்டு குழந்தையை எப்படி பாதிப் பாதியாக ஒருவனுக்கு சிந்திக்கத் தோன்றும் என்றும் வாதிடுகிறான். ஜிம்மிற்கு அந்த நீதியை புரிய வைக்க ஹக்கினால் முடியவில்லை. ஒஹியோ நதியும், மிசிசிபி நதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கெய்ரோ நகருக்குச் செல்ல திட்டமிடுகின்றனர். அங்குதான் அடிமையாக இல்லாமல் சுதந்திரமாக இருக்க முடியும் என ஆசைப்படுகிறான் ஜிம். பனி நிறைய இருந்ததால் அடையாளம் தெரியாமல் கெய்ரோவைத் தாண்டிவிட்டதை உணருகின்றனர்.
ஜிம்மைத் தப்பிக்க வைப்பது தவறு என்றும், டக்ளஸ் சொன்னதுபோல் நரகம்தான் வந்து சேரும் என்றும் ஹக்கிற்கு ஒருபக்கம் தோன்றுகிறது. கூடவே அவன் நல்ல நண்பன் என்றும் புரிகிறது. ஓடிப்போன அடிமை ஒருவனைத் தேடி இரண்டு வெள்ளைக்காரர்கள் கரையில் வருவதைப் பார்க்கிறான். ஜிம்மை கட்டுமரத்தில் இருக்கவைத்து விட்டு ஹக், "யாரும் படகை கரைக்கு இழுக்க வர மாட்டேன்கிறார்கள்" என்று பொய் சொல்கிறான். அவர்களுக்கு பிளேக் நோய் என்று வெள்ளைக்காரர்கள் நினைத்து, கரைக்கு வர வேண்டாமென்று சொல்லி இருபது டாலர் பணத்தை தூக்கியெறிந்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.
படகு ஒன்றில் மோதி கட்டுமரம் கவிழ்ந்துவிடுகிறது. ஹக் தட்டுத்தடுமாறி கரையேறுகிறான். ஜிம்மைக் காணவில்லை. துப்பாக்கிகளோடு சிலர் வருகின்றனர். ஹக்கை அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் கிரேஞ்சர்போர்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஹக் தன் பெயர் ஜார்ஜ் சாக்ஸன் என்றும் தான் ஒரு அனாதை என்றும் சொல்லிக்கொள்கிறான். அந்தக் குடும்பத்தாருக்கு ஹக் பிடித்தமானவனாய் மாறுகிறான். எல்லோருக்கும் இளயவனான பக், ஹக்கிற்கு நெருங்கிய நண்பனாகிறான். அவர்கள் குடும்பத்திற்கும் ஸ்டீபன்சன் குடும்பத்திற்கும் முப்பது வருடத்திற்கும் மேலாக தகராறு. ஒருநாள் கடும் சண்டை நடக்கிறது. ஒருவர் மாற்றி ஒருவர் கொல்ல, கடைசியில் கிரேஞ்சர் போர்டு குடும்பத்தில் இளைய மகளும், ஸ்டீபன்சன் குடும்பத்தில் இளைய மகனுமே மிஞ்சுகிறார்கள். இறந்துபோன பக்கை கட்டிப்பிடித்து அழுகிறான் ஹக். நதிக்கரையில் இருக்கும் ஜிம்மோடு பயணத்தைத் தொடருகிறான். ஹக் பிழைத்து திரும்பியதில் ஜிம்மிற்கு பெரும் சந்தோஷம்.
காட்டிற்குள்ளிருந்து கிங் மற்றும் டியூக் என்பவர்கள் வந்து கட்டுமரத்தில் ஏறிக்கொள்கிறார்கள். ஒரு நகரத்தை வந்தடைகிறார்கள். கிங்கும், டியூக்கும் துண்டு பிரசுரங்கள் எழுதி ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். ஜிம்மிற்கு அவர்கள் நடவடிக்கைகள் எதுவும் பிடிக்கவில்லை. ஷேக்ஸ்பியர் நாடகத்தின் 'ரோமியோ ஜூலியட்' வசனங்களை இஷ்டத்திற்கு பேச பத்துப் பேர் போலத்தான் பார்க்கிறார்கள். 'ராயல் நான்சச் ( )' என்றொரு நாடகம் போடப் போவதாகச் சொல்லி 'குழந்தைகளும், பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆண்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கிங் நிர்வாணமாக, உடலெல்லாம் வர்ணம் பூசிக்கொண்டு மேடையில் தோன்றுகிறான். ஒரே ஆரவாரம். நாடகம் முடிந்ததாகச் சொல்லி அறிவிக்கவும் கூட்டம் கோபத்தில் கொந்தளிக்கிறது. ஒருவன் கூட்டத்திலிருந்து மேடையில் ஏறி 'நாம் இவர்களை கோபத்தில் எதாவது செய்தால் மொத்த ஊரும் நாம் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி எள்ளி நகையாடும். ஊரில் மற்றவர்களும் ஏமாறட்டும்" என்கிறான். கூட்டம் கலைந்து போகிறது. அடுத்த நாளும் ஒரே ஆண்களின் கூட்டம். ஏமாறுகிறது. மூன்றாவது நாள் கூட்டம் அழுகிய முட்டைகளோடும், செத்த பூனைகளோடும் நுழைகிறது. கிங்கும், டியூக்கும் ஓடுகிறார்கள். ஜிம் தயாராக கட்டுமரத்தில் இருக்கவும் தப்பிக்கிறார்கள்.
ஜிம்மிற்கு காது கேட்காத மகள் எலிசபெத்தின் நினைவுகள் வந்து துயரம் தருகின்றன. கிங் அவன் மீது பெயிண்ட் அடித்து விடுகிறான். ஜிம்மும் அவர்களோடு நகரத்தில் சுதந்திரமாக உலவ முடிகிறது. நகரத்தில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவரான பீட்டர் வில்க்ஸ் இறந்துவிட்டதாகவும் அவரது இரண்டு சகோதரர்கள் லண்டனிலிருந்து வரவில்லையென்றும் செய்தி கிடைக்கிறது. கிங்கும், டியூக்கும் அந்த இரண்டு சகோதரர்களாகவும், ஹக் பணியாளாகவும் நடிக்க முடிவு செய்கிறார்கள். எல்லாம் நம்பும்படி நடக்கிறது. வீட்டிலிருக்கும் அடிமைகளை விற்கிறார்கள். வீட்டை ஏலம் விட ஏற்பாடு செய்கிறார்கள். கடைசி மகள் மேரி ஜேன் அழுகிறாள். ஹக்கிற்கு அவள் மீது இரக்கமும் அன்பும் ஏற்படுகிறது. உண்மையைச் சொல்லி அங்குள்ள தன் நண்பன் ஒருவனின் வீட்டில் பாதுகாப்பாக அவளை வைக்கிறான். பீட்டர் வில்க்ஸின் உண்மையான சகோதரர்கள் லண்டனிலிருந்து வந்து விட உண்மை வெளிப்படுகிறது. கிங்கும், டியூக்கும் தப்பியோடி நதிக்கரை வருகிறார்கள். ஹக்கை ஏமாற்றிவிட்டு ஜிம்மை ஓடிவந்த அடிமை என்று காட்டிக் கொடுத்து விடுகிறார்கள். ஹக்கிற்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. 'நரகமே வந்தாலும் வரட்டும்' என்று ஜிம்மைக் காப்பாற்றத் துடிக்கிறான்.
ஜிம் விற்கப்பட்ட பண்ணைக்கு வருகிறான். ஆண்ட்டி சல்லி அவனை டாம் சாயர் என்று வரவேற்கிறாள். அவள் டாம் சாயரின் ஆண்ட்டி என்பது தெரிந்ததும் ஹக்கிற்கு உற்சாகம் ஏற்படுகிறது. மிஸ் வாட்ஸன் இறந்துபோய் விட்டதும் அவளது உயிலில் ஜிம்மை விடுதலை செய்திருப்பதும் இறுதியில் தெரிய வருகின்றன. ஜிம் தன் குடும்பத்தைச் சந்திக்க சுதந்திரமாகச் செல்கிறான்.
கதையில் வரும் பெரும்பாலான வெள்ளையினத்தவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுச் சாகும் கொள்ளையர்களாக, பிளேக் என்றதும் சக மனிதனைக் காப்பாற்றுகிற எண்ணமற்று ஓடுகிறவர்களாக, எப்படியாவது பணம் சம்பாதிக்க அலையும் கிங் மற்றும் டியூக் என்னும் இரட்டையர்களாக, காரணமற்று பழிவாங்குகிற எண்ணம் மட்டுமே கொண்ட கிரேஞ்சர்போர்டு மற்றும் ஸ்டீபன்ஸன்களாக, தாங்கள் மட்டும் ஏமாந்ததோடு நில்லாமல் ஊரே ஏமாறட்டும் என நினைக்கும் மாந்தர்களாக இருக்கிறார்கள். ஜிம் என்னும் நீக்ரோ அடிமை தன்னலமற்றவனாக, களங்கமற்ற நட்பு கொண்டவனாக நிற்கிறான். அப்பாவியான அவனுக்குள் இருக்கும் உண்மை அமைதியாக நிழலாடுகிறது. எல்லோரையும் போல சுதந்திரமாக நடப்பதற்கு அவனுக்குள் ஏற்படும் தவிப்பு நம்மைத் தொற்றிக்கொள்கிறது. மார்க் ட்வைன் சிறுவர் உலகின் வழியாக "பெரியவர்களுக்கான' வாசலைத் திறந்து வைத்திருக்கிறார்.
புத்தகம் கேள்விக்குள்ளாவது நாகரீகம் என்ற போர்வையில் நடக்கும் கேலிக்கூத்துக்களையும், மதத்தின் பேரில் ஊறியிருக்கும் மூடப் பழக்க வழக்கங்களையும். சிறுவர்களை பகுத்தறியத் தூண்டும் நெருப்பை நாவல் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. அந்த வெப்பம் தாங்க முடியாமல்தான் 'கனவான்கள்', புத்தகத்திற்கு எதிராக வழிவழியாக (நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் நம்பியார் போல) கோபம் கொள்கின்றனர். நாவலின் நடை பேச்சு வழக்கில் இருப்பது கூட தடைவிதிக்க ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதும், மார்க் ட்வைன் இலக்கிய அமைப்புகளுக்கு சவால் விட்டார். உங்கள் புத்தக விற்பனை மையங்கள் மூலமாக இந்தப் புத்தகத்தை விற்பதை விட வீடு வீடாகச் சென்று விற்பேன் என்றார்.
இனவேற்றுமைகள் களையப்பட்டுவிட்ட சமூகத்தில், இந்த புத்தகம் இன உணர்வுகளைத் தூண்டுவதாக இருக்கும் என்கிறார்கள் ஒரு சிலர். "நமது சமூகத்திலிருந்து இன வேற்றுமைகளை அகற்றிவிட்டால். ஹக்கிள் பெரி ஃபின் கற்றுக் கொடுப்பதற்கு மிக எளிதான புத்தகமாக இருக்கும்" என்கிறார் டேவிட் பிரெட்லீ. 'இன வேற்றுமைகள் இன்று இல்லை' என மெனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பொய்க்கு எதிராக ஹக்கிள்பெரி ஃபின்னின் தீரச்செயல்கள் கலகம் செய்து கொண்டிருப்பதாகவும், இந்த நாவலுக்கான எதிர்ப்பின் மூலம் இன வேற்றுமையும், பகைமையும் இன்னும் இருக்கின்றன என்றும் வாதங்கள் முன்வருகின்றன.
அடிமைகளாக இருப்பது என்பது மிக இயல்பான, இயற்கையான ஒரு காரியம் என்பதாக மொத்த சமூகமும் ஏற்றுக்கொண்டிருப்பதை நாவலின் பல இடங்களில் பார்க்க முடியும். மார்க் ட்வைன் சமூகத்தில் நிலவும் இந்த 'மௌன சம்மதத்தை' கடுமையாக எதிர்த்தார். இந்த தீவீரம்தான் மார்க் ட்வைனை பிறகு முழுநேர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக நிலைநிறுத்துகிறது. 1835ல் பிறந்த ட்வைன் 1901 முதல் மரணமடைந்த 1910 வரையிலான தனது வாழ்வின் கடைசிக் காலக்கட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பின் உதவித்தலைவராக இருந்திருக்கிறார். ஏராளமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அமெரிக்க யுத்தவெறிக்கு எதிராக பெரும் பிரச்சாரம் செய்திருக்கிறார். ஒரு சமூகப் போராளியாக வாழ்ந்திருக்கும் அந்த எழுத்தாளரின் புத்தகங்களை இன்று உலகத்துப் பள்ளிகளில் எல்லாம் நமது அருமைக்குரிய சிறுகுழந்தைகள் கைகளில் வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவை காத்ரீனா புயல் தாக்கிய போது, அந்த மக்களுக்கு பாதுகாப்பு அளித்ததிலும், நிவாரண உதவி செய்ததிலும் புஷ் அரசின் மெத்தனத்தை உலகமே கடுமையாக விமர்சித்தது. இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்க காட்டிய வேகம் தன் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதில் இல்லை என்று எதிர்க்குரல்கள் கேட்டன. ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கும், பொருட்சேதங்களுக்கும் முக்கிய காரணம், பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலார் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. 'ஹக்கிள்பெரி ஃபின்னின் தீரச்செயல்களின்' இரண்டாம் பாகத்தை 120 ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு எழுத்தாளர் இன்று எழுத ஆரம்பித்திருக்கக் கூடும்.
Comments