top of page

கரிசல் குயில் - நமது மண்ணின் குரல்!



சாத்தூர் ரமண வித்யாலாயாவின் சின்ன மைதானம். மணலில் ஐம்பது அறுபது பேர் போல உட்கார்ந்தும், நின்று கொண்டும் இருந்தோம். ஒரே ஒரு தவுலோடு வந்து பாடிய அந்த இளைஞனின் குரலும், பாடல்களும் ஏற்படுத்திய கிளர்ச்சியும், உணர்வுகளும், புரிதல்களும் புதியவை. அதிர்வுகள் நிரம்பிய அந்த குரல் என்னவோ செய்தது. அப்படித்தான் கரிசல்குயில் கிருஷ்ணசாமி எனக்கு அறிமுகமானார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். பலரும் கரிசல்குயில் கிருஷ்ணசாமியை அவரது குரல் வழியேதான் கண்டிருப்பார்கள்.

 

தொடர்ந்த சில வருடங்களில் தமிழ்நாடெங்கும் கலை இலக்கிய இரவுகள் பற்றிப் படர்ந்தன. சின்னச் சின்னக் கூட்டங்களில் பாடிக்கொண்டிருந்த கரிசல் குயில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடிய மாபெரும் மேடைகளில் பாடிக் கொண்டிருந்தார்.

 

விருதுநகரில் பஸ் ஸ்டாண்ட் அருகில் தோழர்களோடு நின்று டீ குடித்துக் கொண்டிருந்தோம். தேசபந்து மைதானத்து மேடையில் இருந்து ‘அமுத மழையில் என் கவிதை நனைகிறது, நிலவே கொஞ்சம் குடை பிடி’ பாட்டு காற்று வெளியில்  நிறைந்து கேட்டது. “கரிசல் குயில் பாடுறாரு… கலை இலக்கிய இரவு ஆரம்பிச்சிட்டு…” சொல்லிக்கொண்டே எங்களைக் கடந்து வேகமாகச் சென்ற மனிதர்களைப் பார்த்தோம். 

 

கலை இலக்கிய இரவுகளை, தொழிற்சங்க மாநாடுகளை, கட்சியின் கூட்டங்களை ‘எட்டையபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி’ என்றும் ‘மண்ணெண்ணெய் விளக்கினில் பாட்டெழுதி இந்த மண்ணுக்கு கொண்டு வந்தேன்’  என்றும் ஆரம்பித்து வைத்த குரல் அவருடையது. ’பச்சை மரகத பட்டுடுத்தி படுத்து கிடக்குது இயற்கை’  என நமது வெளிகளை அழகாக்கிய குரல் அவருடையது. “கலெக்டர் வர்றாரு” என இந்த அமைப்பை நையாண்டி செய்த குரல் அவருடையது. “உடலில் ஊறி வரும் உதிரம் முழுவதும் என் விழியில் ஊறி வரும் தோழா” என அடி வயிற்றிலிருந்து கேவலை வெளிப்படுத்திய குரல் அவருடையது. ”எங்களைத் தெரியலையா, எங்கள் இசையைப் புரியலையா?’ என நெஞ்சை நிமிர வைத்த குரல் அவருடையது. “தோழர்களே, தோழர்களே, தூக்கம் நமக்கில்லை தோழர்களே!” என நாடி நரம்பெல்லாம் துடிக்கச் செய்த குரல் அவருடையது. எளிய மக்களுக்கு நெருக்கமான மண்ணின் குரல் அவருடையது.

 

அப்போதெல்லாம் விருப்பப்பட்ட பாடல்களை கேட்க வேண்டுமென்றால் டேப் ரிகார்டர்கள்தான். அவரது பாடல் கேஸட்டுகள் வெளியாயின. எங்கள் வீட்டில் அடிக்கடி கேட்கும் பாடல்களில் கரிசல்குயில் கிருஷ்ணசாமியுடையதும் இருந்தன. ‘கல்யாணமான புதிதில் நாம் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோம் என எனக்கு  நம்பிக்கை தந்ததில் முக்கியமானது கரிசல் குயில் பாடல்கள்’ என்று அம்மு பின்னாளில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.  

 

பாடுகிற போது வெளிச்சமான மேடைகளில் நின்ற போதும்,  மற்ற நேரங்களில் தனக்கான இடம் வெளிச்சம் படாத கூட்டத்தில் ஒருவனாய் இருப்பது என்பதாய் கீழே எங்காவது உட்கார்ந்திருப்பார். சமத்துவத்தை முன்வைக்கும் தனது இயக்கத்தின் மீது நம்பிக்கையும், பெருமிதமும், பற்றும் கொண்டவர்.

 

கவிஞர்களின் வரிகளுக்கு அவரே மெட்டமைத்து பாடுகிறார் என்று கேள்விப்பட்ட போது ஆச்சரியமாய் இருந்தது. அந்த பிரக்ஞையோடு அவரது பாடல்களை கேட்டபோது அவரது மேதமையும், இசை மீது அவருக்கு இருந்த தாகமும் புலப்பட்டது. அந்த மனிதர்  கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு மேடையில் பேசும் தங்கள் இயக்கத்தின் தலைவர்கள், பேச்சாளர்கள், கலைஞர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். இடதுசாரி இயக்கக் கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதில் அப்படியொரு மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவார்.

 

சாத்தூரில் நடந்த முதல் கலை இலக்கிய இரவு முடிந்த அதிகாலை அவருக்கானதாய் இருந்தது. கலை இலக்கிய இரவுக்காக தொடர்ந்து சில நாட்களாக வேலை பார்த்த சாத்தூர் கிளை எழுத்தாளர் சங்கத் தோழர்கள் எங்களுக்கு கடும் அசதியாய் இருந்தது. முக்கணாந்தலில் இருந்த ஸ்ரீராம் லாட்ஜில் சிலர் படுக்கச் சென்றோம். கொஞ்ச நேரம்தான் கண்ணயர்ந்திருப்போம். பக்கத்து அறையில் ஒரே ஆரவாரமாய் இருந்தது. எழுந்து சென்று பார்த்தோம்.

 

கரிசல்குயில் கிருஷ்ணசாமியை சுற்றி எழுத்தாளர் ஜெயகாந்தனும் அவரது நண்பர்கள் குழாமும் இருந்தார்கள். அந்த நாளுக்காக காத்திருந்தவர் போல கிருஷ்ணசாமி பாடிக்கொண்டிருந்தார். அங்கிருந்த எல்லோருமே கலை இலக்கிய இரவில் தூங்காமல் பங்கேற்றவர்கள்தான். யாரிடமும் சோர்வோ, தூக்க சோபையோ இல்லை. ரசித்தும், தலையாட்டிக்கொண்டும், உற்சாகக் குரல்களோடும் முகங்களெல்லாம் பூத்திருந்தன. நாங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமானோம். கரிசல்குயில் கிருஷ்ணசாமியை எழுத்தாளர் ஜெயகாந்தன் கொண்டாடிக்கொண்டு இருந்தார்.

 

அந்த நாளை தனக்கு கிடைத்த மிகப் பெரிய விருது போல, அங்கீகாரம் போல கிருஷ்ணசாமி பாதுகாத்து வைத்திருந்தார். அந்த நினைவை எங்கள் சந்திப்புகளின்போது பலமுறை பகிர்ந்திருக்கிறார்.

 

’இது வேறு இதிகாசம்’ ஆவணப்படத்தில் – தலித் மக்களுக்கு பஞ்சாயத்துகள் ஒதுக்கப்பட்டதால் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் தேர்தலை புறக்கணித்த  ஆதிக்க ஜாதியினரிடம் ஜனநாயக முறைப்படி தேர்தலில் பங்கெடுங்கள் என்று தமிழ்நாடு முற்போக்கு சங்கத்தின் சார்பில் பிரச்சாரம் செய்யப்படுகிற   ஒரு காட்சி வரும். பின்னணியில் ஒரு பாடலை ஒலிக்கச் செய்ய நினைத்தோம். கவிஞர் கிருஷியின் பாடலுக்கு மெட்டமைத்து கிருஷ்ணசாமி பாடிய ‘மழையின் தாளம் கேட்குது, மனிதா மனிதா வெளியே வா!” பாடல் அவ்வளவு பொருத்தமாய் இருந்தது. அந்த ஆவணப்படத்தில் அர்த்தமும், உயிரோட்டமும் பெற்ற காட்சிகளில் அதுவும் ஒன்று. மிகச்சிறிய அளவில் பேசப்பட்ட ‘இது வேறு இதிகாசம்’ என்னும் அந்த ஆவணப்படத்தின் டைட்டிலில் மட்டுமே ’பாடல் கிருஷ்ணசாமி’ என இடம் பெற்றது காலத்தின் சோகம்தான்.

 

அவரைப் பற்றி ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று எனக்கும், பிரியா கார்த்திக்கும் ஒரு ஆசை இருந்தது. பிரியா கார்த்தி அவரிடம் சொல்லவும் செய்திருந்தான். நரிக்குளத்தில் வந்து தங்கி, கம்மாக்கரைகளில் உங்களை பாட விட்டு, பேச விட்டுக் கேட்க வேண்டும்” என்று தனது ஸ்டூடியோவில் வைத்து சொன்னதும் ‘அப்படியா’ என ஆசையாய் கேட்டுக் கொண்டார். பிறகு எங்களைப் பார்க்கும் போது, “எப்பப்பா நரிக்குளத்துக்கு வர்றீங்க?” என்று கேட்பார்.

 

தன்னை முன்னிறுத்துகிற, தனக்கு அங்கீகாரம் தேடுகிற இயல்பற்ற அந்த கலைஞனுக்கு சமூக வலைத்தளங்களின் காலமும் சவாலாகவே இருந்தது. டேப் ரிகார்டர்களின் காலம் போல் இல்லை  காலத்துக்கு ஏற்ப பாடல்களையும் மெட்டுக்களையும் தேடிக்கொண்டே இருந்தார். அவரைப் பற்றி அலைமோதும் சிந்தனைகளுக்கு மத்தியில்  ஒன்றை குறிப்பிடத் தோன்றுகிறது.

 

“தோழா, புதுசாய் ஒரு பாட்டுக்கு மெட்டு போட்டிருக்கேன். எப்படியிருக்குன்னு கேட்டுச் சொல்றீங்களா?” எப்போதாவது திடுமென போன் செய்து ஆர்வத்துடன் கேட்பார்.

 

மெட்டு, ராகம், தாளம் குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. கரிசல் குயில் கிருஷ்ணசாமியைத் தெரியும். பெரும் மக்கள் திரளை அழவும், எழுச்சி கொள்ளவும் வைக்கும் அவரது குரலைத் தெரியும். எழுத்தாளர் சங்கம், தொழிற்சங்கம், கட்சி மேடைகளில் நாற்பது வருடங்களுக்கு மேலாய் பாடிக்கொண்டே இருக்கும்  அவரது அர்ப்பணிப்பு தெரியும். “ஆஹா, பாடுங்க தோழா!” என்பேன்.

 

மெல்ல ராகம் இழுத்து ஆரம்பித்து, குரல் தனித்து உயர்ந்து மெட்டில் பயணிக்கும். அவர் குரலும்  என் அமைதியுமாய் அந்த நேரம் இருக்கும். ’அமுத மழையில்..’, ‘எங்களைத் தெரியலையா?’, ‘மழையின் தாளம் கேட்குது’, ‘இலைகள் அழுத மழையிரவு’ என கேட்டவுடன் கலந்துவிடும் பாடல்களின் அனுபவம் கிடைக்காது.  அவரோ மிக உண்மையாகவும், ஆசையாகவும் பாடிக் கொண்டிருப்பார்.

 

பாடி முடித்தவுடன், “நல்லாயிருக்கு தோழா. கேக்க கேக்க பிடிபடும்னு நினைக்கேன்” பொதுவாய் சொல்வேன்.  அவரோ அதுகுறித்து மேற்கொண்டு தொடர மாட்டார். 

 

”இன்னொரு பாட்டுக்கு மெட்டு போட்டிருக்கேன். கேக்குறீங்களா?” அடுத்த பாட்டை பாட ஆரம்பித்து விடுவார். அரை மணி நேரத்துக்கும் மேலாக போனில் தன் புதிய மெட்டுக்களை பாடுவார். அவைகள் குறித்து பெரிதாய் கருத்தெல்லாம் சொல்லியிருக்க மாட்டேன். அவரும் அதனை எதிர்பார்ப்பதில்லை. அவர் பாடுவதை கேட்க வேண்டும். அவ்வளவுதான்.

 

வருடத்திற்கு ஒன்றிரண்டு தடவை போலத்தான் இப்படிப்பட்ட போன் அழைப்புகள் வரும். தங்களுக்கும் இது போல் போன் அழைப்புகள் வந்ததாய் சில தோழர்கள் சொல்லியிருந்தார்கள். கூட்டங்களில் புதிதாய் மெட்டமைத்த  பாடல்களைப் பாடுவார். அப்போதெல்லாம் மாபெரும் மக்கள் கூட்டங்களில் தனித்துவமான குரலால் உணர்வுகளை பெருக்கெடுக்கச் செய்த  கிருஷ்ணசாமியே நினைவுக்கு வருவார். அந்தக் காலமே அவருடையதாக நிலைத்து இருந்தது. அதை அவர் மீண்டும் தொட்டு விட முயன்று கொண்டிருந்ததாகவும்,  தனது இடத்தை தேடிக்கொண்டு இருந்ததாகவுமே படுகிறது.

 

முதல் ஆளாய் தான் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் வந்து உட்கார்ந்திருப்பார். மதுரையில் சென்ற வருடம் நடந்த தமுஎகச பொன் விழா துவக்க நிகழ்வில் அப்படி உட்கார்ந்திருந்தவர் அருகில் உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். தனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பச் சொன்னார். மறந்து  போயிருக்கிறேன். ’ஐயோ, அனுப்பவே இல்லையே’ என்று நினைவுக்கு வந்து வலி தருகிறது.

 

கூடவே நானும் பிரியா கார்த்தியும் நரிக்குளத்துக்கு போகவேயில்லையே என்னும் குற்ற மனப்பான்மையும்  தொத்திக் கொள்கிறது.

 

மூன்று மாதங்களுக்கு முன்பு பிப்ரவரியில் நடந்த அம்முவின் மணிவிழா நிகழ்வில் கரிசல்குயில் கிருஷ்ணசாமி பாடியதையும் அவர் குறித்த நினைவை அம்மு பகிர்ந்து கொண்டதையும் பிரியா கார்த்தி பதிவு செய்து தந்திருக்கிறான். காற்றில் கலந்துவிட்ட மகத்தான மக்கள் கலைஞன், மண்ணின் பாடகன் அதில் பாடிக்கொண்டு இருக்கிறார்




Comments


Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page