top of page

மீளுரு - மணல் மகுடி குழுவின் நாடகம்!

Updated: May 23

முருகபூபதி இயக்கத்தில் மணல் மகுடி நாடகக் குழ்வின் ‘மீளுரு’ நாடகம்
முருகபூபதி இயக்கத்தில் மணல் மகுடி நாடகக் குழ்வின் ‘மீளுரு’ நாடகம்

”மேகமெல்லாம் ரத்தம் ரத்தமா திரண்டு தொங்குது” என குடுகுடுப்பைக்காரன் காலத்தைச் சொல்கிறான். இனக்குழுக்கள், வனவாசிகள், நாடோடிக் கலைஞர்கள், மூதாதையர்கள் என உருமாறி உருமாறித் தோன்றும் நாடகக் கலைஞர்களின் உடலும், மொழியும், அசைவுகளும், இசையும்  முற்றிலும் உணர்வுபூர்வமான காலவெளிகளை நமக்கு காட்டின. காடுகளுக்குள்ளிருந்து சமவெளி வந்த மனிதகுல பயணத்தின் வழியே போர்கள் சூழ்ந்த உலகம் புலப்பட ஆரம்பித்து.

 

சென்ற ஞாயிற்றுக்கிழமை 18.5.2025 அன்று கோவில்பட்டியில் நாடகக் கலைஞர் முருகபூபதி இயக்கியுள்ள புதிய நாடகமான  ‘மணல் மகுடி’ குழுவினரின் ’மீளுரு’ நாடகத்தில் பெற்ற அனுபவம் இது. காடுகளுக்குள்ளிருந்து ஆரம்பித்த போர் உலகப்போர்களாகி, உக்ரைன், பாலஸ்தீனம் என்று சமீபத்திய இந்திய பாகிஸ்தான் போர்கள் மூலம் மனித சமூகம் சந்தித்த பெரும் அழிவுகளையும், வலியையும் பேசுகிற நாடகம் இது.

 

அழிக்கப்பட்ட காடுகளின் மரங்கள், பூச்சிகள், பறவைகள், பாறைகள் எல்லோருமே எம் முன்னோர்கள் என்று நாடோடிக் கலைஞர்கள் அவர்களை வணங்குகிறார்கள். வாழ்வைத் தந்த மரங்களிடமும், எல்லை கடந்து விதைகள் கொண்டு செல்லும் பறவைகளிடமும், நிலத்தை பண்படுத்தித் தந்த புழுக்களிடமும் மன்னிப்புக் கேட்கிறார்கள். இசையால் அவர்களிடம் பேசுகிறார்கள்.

 

போர்களால் எல்லைகள் பிரிக்கப்பட்ட நிலங்களின் இருபுறம் இருந்து தங்கள் சொந்தங்களை அழைக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கிறது. சொல்கிறார்கள்.  கனவுகளும், வலிகளும் மாறி மாறி அலைக்கழிக்கின்றன. எந்த ராஜாவும் அந்தக் கதைகளை மதிக்கவில்லை. கேட்கத் தயாரில்லை. சுவற்றை எல்லோரும் சேர்ந்து உடைக்கிறார்கள். பெண்கள் ஒரு குழந்தையைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

 

போரில் இறந்து போனவர்கள் நிலங்களில் கிடக்கிறார்கள். புல்லாங்குழல் எடுத்து வாசிக்கிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் அசைகின்றன. சிதைக்கப்பட்ட நிலத்தில் படுத்து போரின் கறைகளை துடைத்து துடைத்துப் பார்க்கிறார்கள். நிலத்தில் காதை வைத்து போரில் இறந்தவர்களிடம் பேசுகிறார்கள்.

 

இறந்து போனவர்கள் தங்களுக்காக காத்திருக்கும் மனிதர்களை சந்திக்கிறார்கள். தாங்கள் எப்படி போரில் கொல்லப்பட்டோம் என்பதை சொல்கிறார்கள். ஒவ்வொன்றும் உக்கிரமானவை. கொல்லப்பட்ட தன் உடம்பின் மீது ஒரு பெண்ணின் தலை மட்டும் விழுந்ததாகவும், பின்னர் வெட்டுப்பட்ட ஆணின் கால்கள் விழுந்ததாகவும் அவருக்கு மேல் ஒரு காகிதத்தை இறுகப் பற்றியிருந்த வயதானவரின் கைகளும் விழுந்து கொண்டிருந்ததாய் ஒருவன் சொல்கிறான். முகம் சிதைக்கப்பட்டு இறந்து போன என் கைகளில் இருந்த கடிதத்தைப் பார்த்து அம்மா தன்னை அடையாளம் கண்டதாய் ஒருவன் சொல்கிறான்.  கவிதையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது குண்டுகளால் கொல்லப்பட்டதாகவும்,அந்தக் கவிதையை இப்போது எழுதிக் கொண்டிருப்பதாகவும் ஒருத்தி சொல்கிறாள். போரில் இறந்தவர்களை எல்லாம் பொம்மைகளாகப் பிறக்க வைத்திருப்பதாய் நாடகக் கோமாளி சொல்கிறான். உயிர்க்கொடியின் ஒருமுனையை கையில் பிடித்தபடி இன்னொரு முனையில் உருவாகி இருக்கும் குழந்தைகளை தூக்கி வருகிறார்கள்.

 

இசைக்கருவிகளை தூக்கிக் கொண்டு ஒவ்வொருவராக வருகிறார்கள். அவர்களுக்கு காடுகளின் சத்தமும், பூர்வ குடிகளின் பேச்சும் கேட்கிறது. ”வேர்களைத் தேடிப் போவோம்” என இசைக் கருவிகளை வாசிக்கிறார்கள்.  முரசு அடிக்கிறார்கள். அங்குமிங்கும் தாவித் தாவி குதிக்கிறார்கள். உன்மத்தம் பிடித்தவர்களாய் முழங்குகிறார்கள்.

 

“நாங்க வந்துட்டோம். போர் நிறுத்த முரச இப்ப அடிங்கடா!”

 

நாடகம் முடிந்த போது அதிர்வுகளும், பித்த மனநிலையும் நம்மை கொஞ்ச நேரம் ஆட்டிப் படைக்கிறது. மெல்ல மெல்ல சமநிலைக்கு வருகிறோம். நாடகம் நடித்தவர்கள் அனைவரும் புதியவர்கள் என்றார்கள். அதிசயம் போலிருந்தது. வேறு யாரோ அவர்களுக்குள் வந்து இறங்கியது போலிருந்தது. அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

 

நாடகத்தின் மொழி அவ்வளவு அர்த்தமும் வீரியமும் கொண்டு கவிதையாய் இருந்தது. மீண்டும் பார்க்க நேர்ந்தால் இன்னும் நிறைய அர்த்தங்களையும், உணர்வுகளையும் சேகரித்துக் கொள்ள முடியும். நல்ல அனுபவம்.

 

நாடகத்தில் நடித்தவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள். அவர்களில் சிலர் தங்கள் அனுபவங்களைச் சொன்னார்கள்.  ஒரு பெண் ”நாடகம் குறித்து எதுவும் தெரியாமல் வந்தேன். இப்போது நிறைய தெரிந்து கொண்டேன். இரண்டு நாடுகளுக்கு இடையே நடப்பது மட்டும் போரல்ல. ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே கிளம்புவதே ஒரு போர்தான்” என்றார். இன்னொருவர் ”நாடகம், நடிப்பு என்று மட்டுமில்லாமல் இந்த சமூகம், உலகம் குறித்து தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்” என்றார்.  அவர்கள் எத்தகைய பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட போது, முருகபூபதி என்னும் ஆளுமையின் மீது மதிப்பு கூடியது.

 

நாடகத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்த  எழுத்தாளர்கள், கலைஞர்கள் சிலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இயக்குனர் வசந்த பாலன் சுருக்கமாக, அழுத்தமாக ஒன்றைச் சொன்னார். “நாடகம் முழுக்க சித்திரங்களாய்  (images) தெரிந்தன. உடல் மொழியும், இசையும் அதற்கு வண்ணங்களைச் சேர்த்தன. அவைகளிடமிருந்து நாம் உணர்வுகளைப் பெறுகிறோம். ”.

 

ஆம் அதுதான் நடந்தது.


(நாடகத்தின் சில காட்சிகள் இங்கே.... படங்கள்: பிரியா கார்த்தி )



3 則留言


訪客
5月21日

பார்க்க தவறிவிட்டேன் தோழர் அடுத்து நடந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் தோழர்

按讚
回覆

நல்லது தோழர்!

按讚

訪客
5月21日

அருமை

பொன்ராஜ்

按讚

Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page