ஒரு பாடல் வழியே...
- மாதவராஜ்
- Jun 4
- 2 min read

பலரும் ஒரு பாடலை கேட்டு ரசித்து முடித்து கடந்து அடுத்தடுத்து புதிய பாடல்களை ரசித்தவாறு எங்கோ சென்ற பிறகு ’பழையதாகி விட்ட’ புதிய பாடலை திடீரென்று கேட்டு, ரசித்து ’அட’ என்று அதில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆசாமி நான். இந்த தடவை சுற்றிலும் எழுந்த அதிர்வுகளால் விழித்து எல்லோரோடும் சேர்ந்து கவனிக்க முடிந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் முத்த மழை கொட்டித் தீர்க்கிறது. முல்லை இரவுகள் பற்றி எரிகின்றன.
மேடையில் சின்மயி பாடும்போது, கீழே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் ரசித்த காட்சிதான் மனதில் நிற்கிறது. ரெகார்டிங்கில் தீ பாடும்போதும் அவர் இப்படி ரசித்த காட்சி ஒன்று இருக்கும். நாம் அதைக் காணவில்லை. அவ்வளவுதான். பாடத் தெரிந்தவர்கள் யார் பாடினாலும் அவரவர்க்கென ஒரு தனித்துவமும், பிரத்யேகமான உணர்வும் தரும் பாடல் ’முத்தமழை’. அப்படியொரு இசையும், வரிகளும், வெளியும் கொண்ட அற்புதமான கலவை. இன்னும் சுசிலா, ஜானகி, வாணி ஜெயராம் என ஆரம்பித்து ஜென்சி, சித்ரா என நீண்டு சக்திஸ்ரீ வரை இந்தப் பாடலை பாடினால் எப்படியிருக்கும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நண்பரொருவர், “ஸ்ருதிஹாசன் பாடிய விண்வெளி நாயகா பாடலை சின்மயி பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?” என்று கேட்டார். ”பாடினால் தெரியும்” என்று சொல்லிக் கடந்து விட்டேன். அப்பப்பா, இந்த மனிதர்களுக்குத்தான் எத்தனை எத்தனை யோசனைகள். கேள்விகள்.
நமது யோசனைகளுக்கும், கேள்விகளுக்கும் செல்வோம். ஒரு சினிமாவில் ஒரு பாடலை ஒரு பாடகி பாடியிருக்கிறார். அந்தப் பாடலை வேறொரு பாடகி மேடையில் நேரடியாக பாடுகிறார். சினிமாவில் இருக்கும் பாடலை விட மேடையில் நன்றாக இருப்பதாக ஒரு ஒப்பீடு எழுகிறது. அதே உணர்வுடன் பலரால் பேசப்படுகிறது. தொடர்ந்து பேசப்படுகிறது. வைரல் ஆகிறது. சின்மயி தவிர முன்பின் தெரியாத வேறு ஒருவர் பாடியிருந்தால் இந்த ஒப்பீடு நடந்திருக்குமா? இவ்வளவு பேச்சு எழுந்திருக்குமா?
சமயம் பார்த்து திட்டமிடப்பட்டு சின்மயியை மையமாக வைத்து இந்த விவாதம் எழுப்பப்பட்டதாய் ஒரு பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. இருக்கும். ஆனால் சின்மயிக்கு ஆதரவாக ஒருமித்த பெருங்குரல் சமூக வலைத்தளங்களில் எழுந்திருக்கிறது என்பது உண்மை. இவ்வளவு சிறப்பாக பாடுகிற சின்மயி ஏன் தமிழில் பாடவில்லை என்ற கேள்வியும், தமிழ் சினிமா அவருக்கு வாய்ப்பு தராமல் எட்டு ஆண்டுகளாக தடை விதித்திருக்கிறது என்ற விஷயமுமே இந்த ’பெரும் குரலுக்கு’ வழியமைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் என்னும் பேச்சுக்கும், அதற்கு எதிராய் கிளர்ந்து சின்மயி பாடிக் காட்டிய பிம்பத்துக்கும் அந்தப் பாடலின் ஊடே ‘இன்னும் வரும் எந்தன் கதை’ உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
எட்டு வருடமாக சின்மயி பாடவில்லை என்பது உண்மையோ பொய்யோ, எட்டு வருடமாக சின்மயிக்காக இப்படியொரு குரல் எழவில்லை என்பது உண்மை. பாதிக்கப்பட்ட ஒருவருக்காக குரல் எழுப்பும் இந்த வெகுசன மனோபாவம் ஒரு பாடல் வழியே எதோ ஒருநாளில் அதிசயமாய் பொங்கி விடுகிறது. பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகிறது. சமூக வலைத்தளத்துக்கு வெளியே அலைபாயும் பெரும் ஜனத்திரளுக்கு இப்படி ஒரு பாட்டு வந்திருப்பதே தெரியாது. வெயில்தான் அங்கே கொட்டி தீர்க்கிறது.
எது எப்படியோ, நகரம் நகரமாய், மாநிலம் மாநிலமாய் தக் லைஃப் படத்துக்கு பிரம்மாண்டங்களாய் பிரமோஷன் நடந்து கொண்டிருக்கும்போது, எந்த செலவும் வைக்காமல் பிரமோஷனை கொடுத்திருக்கிறது ‘முத்தமழை’ பாடல் சின்மயி மூலம். இந்தப் பாடல் சில நாட்களாய் தந்திருக்கும் உணர்வுகள், அசைவுகள், ரசனைகள், பிம்பங்கள் எல்லாவற்றையும் மணிரத்னம் தியேட்டர்களில் எப்படியும் காலி செய்திருப்பார்.
மீண்டும் ஒருமுறை முத்த மழை பாடலை கேட்க வேண்டும். கோரஸ் பாடும் மூன்று பெண்களில் நடுவில் இருப்பவர் அவ்வளவு லயித்து பாடுகிறார். சின்மயி இடத்தில் நின்று அவர் எப்போது பாடுவார்?
மகிழ்ச்சி பொன்ராஜ்.
தோழருக்கு அன்பு வணக்கங்கள்.
உண்மையில் அனைத்தும் விளம்பரம் என்றாகிவிட்டது. என்றாக்கப்பட்டுவிட்டது.
'மேல்தட்டு' என்று சொல்லப்படுபவர்கள் திட்டமிட்டு தங்கள் 'மேல்தட்டை' மேலே உயர்த்த அவர்கள் பயன்படுத்தும்
உத்தியே இது.
இன்னும் பல இருக்கிறது நான் சொல்ல.
ஆனால் என்ன செய்ய?
நானோ..!
"வால்காவிலிருந்து கங்கைவரை"
தற்போது நீந்திக் கொண்டிருக்கிறேன்.
இன்றிரவு கரையைக் கடப்பேன்.
மரு. க.கருப்பசாமி.
விளாத்திகுளம்.
அருமை..
பொன்ராஜ்