top of page

Retro


திரையரங்கில் பார்க்க வேண்டும் என நினைத்திருந்த படம். பார்த்தவர்கள் சொன்னதையும், பகிர்ந்ததையும் பார்த்து அவசரப்படவில்லை. ஓடிடியில் நேற்று பார்த்தாகி விட்டது.

 

’பீசா’, ஜிகிர்தண்டா, இறைவியில் இருந்த புதுமையும், வசீகரமும் கார்த்திக் சுப்புராஜிடம் வற்றிப் போய்விட்டது என்பதை அழுத்தமாய் சொல்லியிருக்கும் படம் ரெட்ரோ. ரஜினியின் ரசிகராய் ’பேட்ட’ எடுத்ததில் இருந்து ஆரம்பித்த சரிவு ’ஜகமே தந்திரம்’. ‘மகான்’ என அங்குமிங்குமாய் ஆடி இப்போது ஒரு நிலைக்கு வந்திருக்கிறது.

 

ஜிகிர்தண்டா -2 லிருந்த பல குறைகளையும், சொதப்பல்களையும் படத்தின் உக்கிரமான கடைசி பதினைந்து நிமிடங்கள் கண்டு கொள்ளாமல் போகச் செய்தது. அதே மாவை எடுத்து சூர்யாவை வைத்து வேறுவிதமாக பிசைந்து கொடுக்க முயற்சித்து பரிதாபமாக தோற்றுப் போயிருக்கிறார்.

 

தான் யார் என தெரியாமல் வளர்ந்த ஒருவன், தன்னை அறிந்து கொண்டபின் என்னவாகிறான் என்பதுதான் ரெட்ரோவின் ஒன்லைன். இந்த டெம்ப்ளேட்டில் பல கதைகள் காலகாலமாய் வந்திருக்கின்றன. நினைவுகளில் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ரகசியம், சுவாரசியம், தேடுதலோடு எளிதாக இணைக்கக் கூடிய டெம்ப்ளேட் அது. அப்படி தன்னை அறிந்து கொள்கிற ஒருவன், ஒடுக்கப்பட்டவர்களில், அடிமைகளில் ஒருவனாக தன்னை இனம் கண்டு கொள்வது என்பது மேலும் வீரியம் மிக்கது. விடுதலை உணர்வுமிக்க களம் அது.  வெகுசன மக்களோடு நெருக்கம் கொள்ளக் கூடியது. அப்படி ஒரு டெம்ப்ளேட் இருந்தும் கோட்டை விட்டிருக்கிறார்கள் கார்த்திக் சுப்புராஜும், சூர்யாவும். தமிழில் இந்த டெம்ப்ளேட்டில் அதிக படங்களை வெற்றிகரமாக்கியது எம்.ஜி.ஆர் என்று நினைக்கிறேன்.

 

சூர்யா முதற்கொண்டு அத்தனை கலைஞர்களும்,  தொழில்நுட்ப வல்லுனர்களும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் படம் ரசிக்கும்படியாகவோ, அர்த்தம் கொண்டதாகவோ இல்லை. அந்த உழைப்பு முழுவதும் வீணாகி இருக்கிறது.

 

தூத்துக்குடி, வளர்ப்புத் தந்தை, காதலி, சிறை, அந்தமான் தீவு என கதை பயணிக்கிறது. காதல், போர், தம்மம் என பாகம் பாகமாய் பிரித்துச் சொல்வது, குறியீடுகளை அங்கங்கு காட்டுவது எல்லாம் எதோ பெரிய விஷயத்தைச் சொல்வது போல் பாசாங்குகளாகத்தான் தெரிகின்றன.  ஒரு விஷயத்தை எளிமையாக, அழுத்தமாகச் சொல்லத் தெரியாதபோது ஏற்படுகிற பலவீனங்கள் இவை.

 

நாடோடி மன்னனையும், அடிமைப்பெண்ணையும் ஒரு தடவை கார்த்திக் சுப்புராஜ் பார்த்துவிட்டு ரெட்ரோ ப்ராஜக்டை ஆரம்பித்திருக்கலாம். ’மனிதன் மாறிவிட்டான்’ பாடலோடு அவரது பாணியில் இன்றைய அரசியலை பேச முயற்சித்திருக்கலாம்.

Comentarios


Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page