top of page

Stolen (இந்தி சினிமா)


ஓடிடியில் சாவகாசமாய் பார்க்க ஆரம்பித்த படத்தின் முதல் காட்சியே கவனிக்க வைத்தது. மிக இயல்பாய் தொடர்ந்த அடுத்தடுத்த காட்சிகளில் ஒரு பதற்றம் தொற்ற ஆரம்பித்தது. பிறகு ஒரு கணம் கூட டிவியை விட்டு பார்வை விலகவே இல்லை. ஒரு மணி நேரம் முப்பத்து மூன்று நிமிடங்களும் வீட்டில் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல் பார்த்த படம்.

 

திரில்லர் வகைப் படம்தான். வழக்கமான கொலை, பழிவாங்கல் என்றில்லாமல் ஒரு குற்றம் பற்றி பேசுகிறது. இந்த சமூகத்தின் அவலம் ஒன்றை சந்தித்த நேரடி அனுபவம் நம் உணர்வெங்கும் நிறைந்து அலைக்கழிக்கிறது. கண்ணெதிரே எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் நமக்கு எதற்கு வம்பு என்று விலகிச் செல்கிற  வெகுஜன மனநிலையை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிறது. பிரச்சினைகளோடு ஒட்டாத கௌதம் என்னும் கதாபாத்திரம் வழியே அமைதியான ஆனால் அழுத்தமான  உரையாடலை படம் நிகழ்த்துகிறது.

 

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ரெயில்வே ஸ்டேஷன் வெளியே அலட்சியமாக செல்போனில் பேசியபடி தன் தம்பியை வரவேற்க காத்திருக்கும் அந்த கௌதமாகத்தான் நம் சமூகம் இருக்கிறது. சக மனிதர்களை கவனிக்காத, அவர்கள் அழுகையை கேட்க விரும்பாத, அவர்களின் இழப்பை அறிய விரும்பாத ஒரு சமூகத்தை இன்றைய முதலாளித்துவம் உருவாக்கி வருகிறது.  அதிலும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வையும் சாவையும் ஒரு பொருட்டாக கருதாத  அமைப்பை அது முன்னெடுத்து வருகிறது. அவைகளைத் தாண்டி ஒருவருக்குள் எட்டிப் பார்க்கும் மனிதாபிமானம் எவ்வளவு உயிர்ப்பானது என்பதை காட்டுகிறது.  அதற்காக எவ்வளவு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. கௌதமின் தம்பி ராமனாக வரும் சுபம் வர்தன்  அப்படியொருவனாக இருக்கிறான்.

 

புலம் பெயர்ந்த தொழிலாளி ஜம்பாவாக வரும் மியா மால்சர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்னும் பிரக்ஞை நமக்கு  ஒரு இடத்திலும் வரவில்லை. இழப்பு, வலி, ஏக்கம், பதைப்பு, ஆவேசம், எதையும் இழக்கத் துணியும் சித்தம் என எல்லாம் அவரது  உடலும் உள்ளமுமாகி இருக்க வேண்டும்.

 

படத்தின் ஒவ்வொரு காட்சியும், உரையாடலும், நகர்வும் மிக நுட்பமாக திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கொஞ்சம்தான் கதாபாத்திரங்கள். மனிதர்களின் சின்னச் சின்ன அசைவுகளும், பார்வைகளும், வார்த்தைகளும், அதன் தொனியும் தரும் அர்த்தங்களை கச்சிதமாய் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.  

 

உதவிக்கு யாருமற்ற இரவில் ஒரு தாயின் ஈனக்குரலை அலட்சியப்படுத்தும் காவல்துறையை செயல்பட வைப்பதற்கும்   படித்த, சமூக மரியாதை கொண்ட மனிதர்களின் குரல் தேவையாய் இருக்கிறது என்பதை மிக நுட்பமாக கடத்துவதில் துவங்கும் கவனம் படம் முழுவதும் நீடிக்கிறது.

 

ஜம்பா என்னும் கதாபாத்திரத்தின் மீது படம் முழுவதும் மாறி மாறி சந்தேகங்கள் நீடித்துக்கொண்டே இருப்பதாய் கதை நகர்கிறது. அது சஸ்பென்ஸுக்காக மட்டுமல்ல. நம் சமூகத்தில் எளியவர்களின் விதி அது. இயக்குனர் கரண் தேஜ்பாலின் சிரத்தையும் அக்கறையும் பாராட்டுக்குரியது.

 

2018ம் ஆண்டு பீகாரில் குழந்தையைக் கடத்தியவர்கள் என இரண்டு பேரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள். ஆனால் பிறகு அவர்கள் குழந்தையைக் கடத்தியவர்கள் இல்லை என தெரிய வந்திருக்கிறது. அந்த உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படம் என்று இயக்குனர் சொல்லி இருக்கிறார். அவரது முதல் படம் இது. வணிக சினிமாவுக்கு அவர் இரையாகாமல் இருக்க வேண்டும்.

 

அவசியம் பார்க்கலாம். பிரைமில் இருக்கிறது.

1 Comment


ஜெ
Jun 08

அருமையான பதிவு

Like

Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page