top of page

Tourist family



குடும்பத்திற்குள்ளேயே மனிதர்கள் தனித்தனி தீவுகளாகியிருக்கும் காலத்தில் மனிதம் பற்றி பேசுகிற படம். சக மனிதர்களை கவனிப்பது, அக்கறையுடன் சில வார்த்தைகள் பேசுவது, அன்புடன் பழகுவது என வாழ்க்கையின் அழகை, அர்த்தத்தை உணர்த்துகிற படம். அதற்கான கதையும்,  நல்ல நடிகர்களும் வாய்த்த தமிழ் சினிமா.

 

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, பகவதி பெருமாள், பாஸ்கர், ரமேஷ் திலக், என படத்தில் வரும் அனைவருமே சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற உலகம் வெளிப்படும்போது நெகிழ்ச்சியடைய வைக்கிறது. எல்லாவற்றையும் இணைத்து நிற்கிற மனிதம் வானம் போல் விரிகிறது.  இப்படியொரு கதையை தனது முதல் சினிமாவாக்கத் துணிந்த புதிய, இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்தை தமிழ் சினிமா உலகம் வரவேற்கும், வாழ்த்தும்.

 

யாரென்றே யாருக்குமே தெரியாதவர்களாய் நான்கு பேர் குடும்பமாக ஒரு தெருவுக்குள் நுழைகிறார்கள். போலிஸால் தேடப்படும் அவர்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர்களாய், நம்பிக்கைக்குரியவர்களாய்  எப்படி ஆனார்கள் என்பதுதான் ஒரு வரிக் கதை. காட்சிகளாய் கதையை அடுக்கிய விதத்தில் படம் சுவாரசியமாய் இருக்க வேண்டும் என்னும் மெனக்கெடல் தெரிகிறது. கதையை காட்சிகளாக்கியதில்தான் போதாமை வெளிப்படுகிறது.

 

மொத்தக் குடும்பமும் கலக்கத்தில் இருந்தாலும் கலகலப்புக்கு குறைவே இல்லை. வந்ததிலிருந்து அப்பாவிடம் பேசாமல் உம்மென்றே இருக்கிறான் மூத்தவன். ஒருநாள் உடைந்து போகிறான். எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அப்பாவிடம் வலியோடு சொல்கிறான். கொஞ்ச நேரத்தில் அவன் துயரமும், மன அழுத்தமும் எவ்வளவு அர்த்தமற்றது என்று அவனது வாட்ஸ்-அப்பில் வரும் ஒரு வீடியோ உணர்த்துகிறது. மொத்த தியேட்டரும் ஆரவாரிக்கிற காட்சி அது. அளவாகச் சொல்லி விட்டு அடுத்த காட்சிக்கு நகர்ந்திருந்தால் தியேட்டரை விட்டு வந்த பிறகும் நம்மிடம் தங்கி, தன்னால் சிரிக்க வைத்திருக்கும். அப்படிப்பட்ட காட்சியை வளவளவென்று இழுத்து, குடும்பத்தையே ஆட வைத்து, போதும், போதும் என ஆக்கி விடுகிறார்கள். கச்சிதம் இல்லை. மொத்தப் படத்திற்கு இந்த ஒரு காட்சி ஒரு பதம். படத்தின் பலமும் பலவீனமும் இதுதான்.

 

மிகைப்படுத்தலும், அவ்வப்போது பார்வையாளர்களிடமிருந்து தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுகிற காட்சியமைப்புகளும் படத்தை நல்ல சினிமா என்பதோடு நிறுத்தி விடுகின்றன. இயல்பாகவும், பார்வையாளர்களுக்கு நெருக்கமாகவும் சொல்லப்பட்டிருந்தால் அற்புதமான சினிமாவாக உயர்ந்திருக்கும்.

 

கள்ளத் தோணியில் நாடு விட்டு நாடு வருவது, ஆதார் முதல் பல கார்டுகளை பொய்யாய் தயாரித்து வாழ்வது போன்ற பல காட்சிகள் ஒருபக்கம் நெருடலாக இருந்தாலும், மனதிற்கு பிடித்துப் போகின்றன.

 

டீசரைப் பார்த்ததும் இந்தப் படத்திற்கு கண்டிப்பாக போக வேண்டும் எனத் தோன்றியது. அவ்வளவு அமர்க்களமாக இருந்தது. வசனங்களும், தொனியும், பாவனைகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.  டிரைலரைப் பார்த்ததும் கதையின் போக்கு தட்டுப்பட்டது. டீசரின் தெறிப்புகள் கொஞ்சம் குறைந்து போயிருந்தன. முழு படம் பார்த்ததும்  இன்னும் நல்லா எடுத்திருக்கலாமே என்னும் ஏக்கம் வருகிறது. அபிஷன் ஜீவிந்த் இந்த இடத்திலிருந்து தன்னை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையும் வருகிறது.

Comments


Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page