நீ யார்? - 1
- மாதவராஜ்
- Mar 30
- 3 min read
Updated: May 6

( தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவதற்கு வெறி கொண்டிருந்த
ஒரு நிர்வாகத்தைப் பற்றிய கதை இது.
தொழிற்சங்கத் தலைமை ஏற்ற ஒரு இளம் தலைமுறையை நசுக்க முயன்ற கதை.
ஒழுங்கு நடவடிக்கை என்னும் பெயரில் அடுக்கப்பட்ட பொய்களின் தோலை உரிக்கும் கதை. தொழிற்சங்கத்தின் முன்னே நிர்வாகம் தோற்ற கதை.
உண்மைக் கதை.
எனது கதையும் கூட...)
-----------
“5 மணி வரை இருப்பேன். அதன்பின் ஒரு நிமிடம் கூட நான் இங்கு இருக்க மாட்டேன்.”
மேலாளர் கதிர்வேலுவிடம் தெளிவாகச் சொல்லி விட்டேன். கொரோனா முகக் கவசம் அணிந்திருந்த அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அப்போது நேரம் மாலை 4.25. நாள் 30.4.2021.
முப்பத்தேழு வருடங்களும், 5 மாதங்களும் பணிபுரிந்த தமிழ்நாடு கிராம வங்கியில் (2019 மார்ச் மாதம் வரை பாண்டியன் கிராம வங்கி) இருந்து ஓய்வு பெற மேலும் 35 நிமிடங்கள் இருந்தது.
சாத்தூர் தலைமையலுவலகம், பூச்சிக்காடு, சாத்தூர் கிளை, விருதுநகர், சங்கரலிங்கபுரம், திருத்தங்கல், சாத்தூர், சூலக்கரை மேடு கிளைகளில் பணிபுரிந்திருந்தேன். தொழிற்சங்கப் பணியின் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்த 600 கிளைகளில் 500க்கும் மேற்பட்ட கிளைகளுக்கு சென்றிருந்தேன். கடைசியாக சேலத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கி.மீ தொலைவில் இருக்கும் மின்னம்பள்ளி என்னும் அந்த சிறிய ஊரின் கிளையில் அமர்ந்திருந்தேன்.
1983, டிசம்பர் 1ம் தேதி, எனது 22ம் வயதில் இந்த வங்கியில் பணிக்குச் சேர்ந்தேன். வாழ்வின் பெரும்பகுதி இந்த வங்கியோடுதான். கூட்டங்கள், போராட்டங்கள், பயணங்கள் என காலமெல்லாம் தோழர்களோடும், வங்கியின் ஊழியர்களோடும் இருந்த நினைவுகள்
அலைமோதிக் கொண்டு இருந்தன. தொழிற்சங்கப் பணிகளும் அதுகுறித்த சிந்தனைகளும், செயல்களுமாய் நிறைந்த அனுபவங்களால் நெஞ்சு விம்மிக் கிடந்தது.
அந்தக் கிளையில் தோழர்கள் அறிவுடைநம்பி, பத்மநாபன் அண்டோ கால்பர்ட், அஸ்வத், பரிதிராஜா, சங்கர், லஷ்மி நாராயணன், தங்க மாரியப்பன், பத்மநாபன், வினோத், ராஜராஜன் இன்னும் சில தோழர்கள் என்னோடு இருந்தார்கள். பா.கிருஷ்ணகுமார், சோலை மாணிக்கம், போன்ற தோழர்களோடு சாத்தூரில் ஆரம்பித்த பயணம் அது. விருதுநகர் வழியாக வந்து சேலத்தில் இளம் தோழர்களோடு தொடர்ந்திருந்தது. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து கொண்டிருந்தது.
மேலாளர் கதிர்வேல் கிளையில் இருந்த போனில் யாரிடமோ பேசினார். பின்னர் மொபைலை எடுத்து வெளியே போய் பேசி வந்தார். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
கிளையில் இறுக்கமும் தவிப்பும் அப்போது நிறைந்திருந்தது இவ்வளவு காலமும் சங்கத்துக்காக உழைத்த தங்கள் அன்புக்குரிய தோழர் மாதவராஜை நல்ல முறையில் வழியனுப்ப இயலாதோ என்னும் வருத்தமும், கோபமும் அவர்களிடம் தெரிந்தது. ’அமைதியா இருங்க. நிதானமா இருங்க’ காலையிலிருந்தே சொல்லியிருந்தேன்.
”ஒரு தடவை நிர்வாகத்துடன் பேசிப் பார்ப்போம்” என்று ஆண்டோ சொல்லிப் பார்த்தான். வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டேன். எந்தத் தவறும் செய்யாதபோது நாம் எதற்கு இறங்கிப் போக வேண்டும் என்பதே என் கருத்தாக இருந்தது. தோழர் சோலைமாணிக்கம் என் மீது கொண்ட அக்கறையினாலும் அன்பினாலும் தனக்குத் தெரிந்த சில உயரதிகாரிகளோடு பேசியதாகச் சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. சம்மதமும் இல்லை. ’எது நடந்தாலும் என்னிடம்தானே வந்து முடிய வேண்டும். பார்த்துக் கொள்ளலாம்” என்பதில் உறுதியாக இருந்தேன்.
2021 மார்ச் மாதம் 10ம் தேதி, எனக்கும் அறிவுடைநம்பி, அஸ்வத், தங்கமாரியப்பன், லஷ்மி நாராயணன், சங்கர் ஆகிய ஆறு தோழர்களுக்கும், நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் கேட்டு கடிதங்கள் (Explanation Letters) வந்தன. ஓய்வு பெற்ற தோழர்கள் சோலைமாணிக்கத்திற்கும், கிருஷ்ணனுக்கும் ஏன் உங்கள் பென்ஷனை நிறுத்தக்கூடாது எனவும் மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அப்போதே நிர்வாகத்தின் நோக்கத்தையும் தீவீரத்தையும் ஒரளவுக்கு ஊகித்திருந்தோம்.
2021 மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வு பெற்றவர்கள் சங்கம் (TNGBRS) நடத்திய தர்ணாவின் போது நாங்கள் ஆறு பேரும் தலைமையலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், சேர்மன் (அப்போதைய சேர்மன் மிஸ்டர் செல்வராஜ்) கேபினுக்குள் ஒழுக்கமில்லாமல் கதவைத் திறந்து கொண்டு சென்றதாகவும், பின் சேர்மனையும் தலைமையலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களையும் வழிமறித்ததாகவும் , சத்தம் போட்டு வன்முறையாக நடந்து கொண்டதாகவும் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அத்தனையும் ஜோடிக்கப்பட்டது. சங்கத்திலிருந்து 1.3.2021 அன்றே நடந்த விஷயங்களை TNGBOA பொதுச்செயலாளர் தோழர் அறிவுடை நம்பியும், TNGWU பொதுச்செயலாளர் அஸ்வத்தும் வாட்ஸ்-அப்பில் அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார்கள்.
நடந்ததே வேறு.
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு நிர்வாகத் தரப்பில் கொடுக்கப்பட்டு வந்த பிரிமியத் தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்தும், பணி ஓய்வு பெற்று இறந்து போன ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய பென்ஷன் காலதாமதம் ஆவதை சுட்டிக் காட்டியும் TNGBRS சங்கத்திலிருந்து 1.3.2021 அன்று சேலத்தில் தர்ணா நடத்தினார்கள். போராட்டத்தை வாழ்த்தி, தார்மீக ஆதரவு கொடுப்பதற்காக TNGBOA-விலிருந்தும் TNGWU-விலிருந்தும் தோழர்கள் மாதவராஜ், அஸ்வத்,பரிதிராஜா, தங்க மாரியப்பன், சங்கர், லட்சுமி நாராயணன், அறிவுடை நம்பி, பத்மநாபன்,அண்டோ கால்பர்ட் ஆகியோர் சென்றிருந்தோம். கொரோனா நேரம் என்பதால் காவல்துறையிலிருந்து வந்த போலீஸார் மதியம் 1 மணிக்குள் தர்ணாவை முடிக்குமாறு வலியுறுத்தினார்கள். எனவே TNGBRS சங்கத்திலிருந்து சேர்மனைப் பார்த்து மனு கொடுப்பதற்காக தோழர்கள் சோலைமாணிக்கம், புளுகாண்டி, கிருஷ்ணன், சுப்பாராமன் ஆகியோர் சென்றனர். மெமொரெண்டத்தை வாங்கிய சேர்மன் அதை மேஜையில் தூக்கி எறிந்து விட்டு, அவரது அறையின் விளக்கை அணைத்தபடி வெளியே வந்திருக்கிறார். உள்ளே சென்றவர்கள் “ஏன் சார் இவ்வளவு அநாகரிகமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்கிறீர்கள்” என கேட்டு வெளியே வந்திருக்கிறார்கள். உடனே சேர்மன் ”யார் நீங்கள்?” என்று ஆங்கிலத்தில் (who are you?) என கேட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு வாக்கு வாதம் நடந்தது. கேள்விப்பட்ட நான் அதன் பிறகு உள்ளே சென்று சமாதானம் செய்து தோழர்களை வெளியே அழைத்து வந்தேன்.
சங்கத் தரப்பில் எங்கள் மீது ஒரு தவறும், குற்றமும் கிடையாது. முறையற்று நடந்து கொண்டது முழுக்க சேர்மன் மிஸ்டர் செல்வராஜ். நடந்ததையெல்லாம் மறைத்து விட்டு, சங்கத் தலைவர்கள் மீது விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது நிர்வாகம். குற்றச்சாட்டை மறுத்து உரிய பதில்களை சம்பந்தப்பட்ட தோழர்கள் அனுப்பினர். அந்த பதில்களை மறுத்து நிர்வாகம் மார்ச் 30ம் தேதி சார்ஜ் ஷீட் கொடுத்தது.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருந்தது.
ஆறு பேரில் என்னைத் தவிர எல்லோருமே இளம் தோழர்கள். எனக்கு ஓய்வு பெற சரியாக ஒரு மாதமே இருந்தது. அதைக் குறி வைத்துத்தான் எனக்கு சார்ஜ் ஷீட் நம்பர் 42/2021ஐக் கொடுத்திருந்தது. சார்ஜ் ஷீட் இருக்கும்போது 30.4.2021 அன்று எனக்கு நிர்வாகம் பணி ஓய்வை நிறுத்தி வைப்பதாக (cessation of service) கடிதம் கொடுத்தது என்றால், எனக்கு ஓய்வு காலச் சலுகைகள் நிறுத்தப்படும். எனவே தோழர் மாதவராஜ்க்காக சங்கம் தன்னிடம் இறங்கி வரும் என்பதுதான் சேர்மன் மிஸ்டர் செல்வராஜின் திட்டமும் நோக்கமும்.
அந்த 30.4.2021ல்தான் நாங்கள் அனைவரும் கிளையில் இருந்தோம்.
மணி சரியாக 5-ஐத் தொட்டது.
Comments