top of page

"மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்”

”ஐம்பது வருடங்களாக இந்த மண்ணில் பாடிக்கொண்டிருக்கிறான். பாடிய அனைத்துப் பாடகளுக்கும் அவனே மெட்டமைத்து பாடிய அற்புதமான கலைஞன். நரிக்குளம் என்னும் சின்னஞ்சிறிய ஊரில் இருந்து எழுத்தாளர் சங்கம், தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் பாடியவன். அவன் தங்கியிராத சி.பி.எம் கட்சி அலுவலகங்கள் தமிழ்நாட்டில் இருக்காது. இந்த நிலம் முழுவதும் படுத்துக் கிடப்பது போல அவனது சித்திரம் தெரிகிறது”

 

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசப் பேச கூடியிருந்தவர்கள் விம்மிக் கொண்டிருந்தனர். நம் அருகில் கைப்பிடித்துப் பேசிய, அப்படியொரு வெள்ளந்தி மனிதனாய் சிரித்த, மேடையில் நின்று கணீரென்று பாடி பெரும் மக்கள் திரளை தன் வசப்படுத்திய கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் நினைவுகளால் நிறைந்து போயிருந்தனர். நம் காலத்தின் மக்கள் கலைஞன் கரிசல்குயில் கிருஷ்ணசாமி.

சென்ற சனிக்கிழமை, 17.5.2025 அன்று கரிசல் குயில் கிருஷ்னசாமியின் நினைவேந்தல் கூட்டம் ராஜபாளையத்தில் நடந்தது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ராஜபாளையம் கிளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், தோழர்கள் என நிறைந்திருந்தது அரங்கம். கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் இணையர் முத்துலட்சுமி அவர்களும், மகள் துர்காவும் மற்றும் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்ட துணைத்தலைவர் தோழர் தேனீவசந்தன் தலைமை தாங்கினார். ராஜபாளையம் கிளைச்செயலாளர் கவிஞர் நந்தன் கனகராஜ் அனைவரையும் வரவேற்றார். கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் படத்தை சி.பி.எம் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலபாரதி திறந்து வைத்தார். தமுஎகச மாநிலத் தலைவர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம், துணைப் பொதுச்செயலாளர் வேலாயுதம், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் உதயசங்கர், மணிமாறன், மாதவராஜ் உட்பட பலரும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். கவிஞர் லஷ்மிகாந்தன் நிகழ்வை தொகுத்தளித்தார்.


பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத அவரது இயல்பும், மனிதாபிமானம் மிக்க தோழமையும், தன்னைப் போல பல கலைஞர்களை உருவாக்கிய பங்களிப்பும், இடதுசாரி இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த தீராத பற்றும், கலைஞனாய் அவர் பெற்றிருந்த  தனித்தன்மையும் நாம் வாழும் காலத்தில் மகத்தானவை.  தொடர்ந்திருந்த உளவியல் பிரச்சினையோடு அந்தக் கலைஞன் காட்டிய அர்ப்பணிப்பும், அவரை சமூகத்திற்கு அளித்திருந்த அவரது துணைவியாரின் வாழ்வும் அசாதாரணமானவை, போற்றுதலுக்குரியவை.

 

கரிசல்குயில் கிருஷ்ணசாமி காலமாவதற்கு சில நாட்கள் முன்பு கவிஞர் இன்குலாப் கவிதையினை மெட்டமைத்துப் பாடியிருந்திருக்கிறார். அதனை கவிஞர் லஷ்மிகாந்தன்  அரங்கத்தில் ஒலிபரப்பினார். அமைதி கொண்ட அரங்கத்தில் கிருஷ்ணசாமி “மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்” என எப்போதும் போல் பாட ஆரம்பித்தார். எப்போதையும் விட அந்தக் குரல் பெரும் தவிப்பும், உயிர்ப்பும் மிக்கதாய் இருந்தது. அந்தப் பாடலின் வழியே தனது வாழ்வை  தனது குரலில் அங்கே கரிசல்குயில் கிருஷ்ணசாமி பகிர்ந்து கொண்டிருந்தார்.


கிடைக்கப் பெற்ற சில காட்சிகளை ‘“மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்” என்ற பாடலோடு இணைத்துப் பார்த்திருக்கிறேன். அதன் Youtube இணைப்பு கீழே.



 







நன்றி: ·       கவிஞர் இன்குலாப் ·       அன்பின் இசை – யூடியூப் சேனல் ·       ஷ்ருதி டிவி ·       கைத்தடி டிவி ·       தீக்கதிர் சேனல்

6 comentários


Ponraj
20 de mai.

நினைவு கூறும் அருமையான நிகழ்வு...

பொன்ராஜ்

Curtir
மாதவராஜ்
20 de mai.
Respondendo a

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பொன்ராஜ்!

Curtir

Convidado:
20 de mai.

அருமை யான அஞ்சலி மாது

Curtir
மாதவராஜ்
20 de mai.
Respondendo a

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!

Curtir

Convidado:
20 de mai.

எதிர் பார்ப்பு இல்லாத எளிய தோழர் உங்கள் வார்த்தையில் சொன்னதை போல் நிலம் முழுவதும் அவர் முகம் தெரியதான் செய்கிறது தோழர்

Curtir
Respondendo a

ஆமாம், தோழர்!

Curtir

Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page