top of page

தொடரும் (Thudarum)



சினிமாவில் பிரபல நடிகர்களுக்கு டூப்பாக இருந்த ஸ்டண்ட் மேன் சண்முகம்,  பின்னர் அதிலிருந்து ஒதுங்கி பென்சி என்னும்  டிரைவராக அறிமுகமாகிறான். ஒரு பழைய காலத்து காரை வைத்து பிழைப்பு நடத்துகிற அவனுக்கென்று குடும்பம் இருக்கிறது.  அன்பு, கண்டிப்பு, கேலி, விளையாட்டுகள், அழகான சண்டைகள், பொய்க் கோபங்கள் கொண்ட அந்த எளிய குடும்பத்து மனிதர்களையும், அவர்களது வாழ்வையும், நாட்களையும் சின்னச் சின்னக் காட்சிகளால் கோர்த்துக் கொண்டு ஆரம்பிக்கிறது படம்.  நெருக்கமாகிறார்கள் அந்த மனிதர்கள்.

 

அந்தக் காரிலிருந்து ஒரு சின்ன பிரச்சினை ஆரம்பிக்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் தன் கார் கையகப்படுத்தி வைத்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. அதை மீட்க முயற்சிக்கிறான். அடுத்து அடுத்து எதிர்கொள்ளும் சம்பவங்கள் அவனை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. விருப்பமில்லாமல், வேறு வழியும் தெரியாமல் பயணிக்கும் அவனுக்கு தன்னைச்  சுற்றி நடப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இருட்டிலிருந்து வெளியே வரும்போது தன் குடும்பத்தின் மீது விழுந்த இடியை  காண்கிறான். அதிர்ச்சியும், பெரும் இழப்பையும் உணர்கிறான்.

 

இந்த இடம் வரைக்கும் பிரமாதமாக படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். பென்சியின் மனநிலையில் நாமும் தவித்துப் போகிறோம். என்ன நடந்தது என்பது நமக்கு மெல்ல தட்டுப்பட ஆரம்பிக்கிறது. ஸ்டண்ட் மேனாக இருந்த பென்சி பழிவாங்கும் காட்சிகள் வழக்கமான சினிமா பாணியில்தான் இருக்கின்றன. இருந்தாலும் என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து  கொள்ள கடைசி காட்சி வரை கதையை வைத்திருப்பது படத்தின் சிறப்பு. படிக்கட்டுகளில் உட்கார்ந்து பேசும் அந்த இளம் காதலர்களின் குரல் மனதை பிசைகிறது.

 

ஓடிடியில் மோகன்லால் நடித்த எம்பிரான் பார்த்து ’அய்யய்யே’ என்றிருந்தது. நல்லவேளை தொடரும் பார்த்தது. அந்த கசப்பை மோகன்லால் போக்கியிருக்கிறார். பென்சியாக நடித்திருக்கும் அவர் மொத்தப் படத்தையும் தாங்கி இருக்கிறார்.   ஆர்ப்பாட்டமில்லாமல், சவடால்கள் செய்யாமல் வரும் நாயகர்களைப் பார்க்க பிடிக்கிறது.  

 

கொஞ்ச நேரம் வரும் பாரதிராஜா மனதில் நிற்கிறார். அழுத்தமான சிறுகதை போன்றிருக்கிறது அவரது பாத்திரம். வில்லனாக வருகிறவர் மிரட்டுகிறார். படத்தின் எல்லா பாத்திரங்களும் இயல்பாக இருக்கின்றன. ஷோபனாதான் பாவம் போல் இருக்கிறார்.

 

மிகச் சின்ன கதைதான். வழக்கமான சினிமா சங்கதிதான்.  சொன்னதிலும்  காட்சிப்படுத்தியதிலும்தான் அத்தனை சுவாரசியமும்!

Comments


Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page