குழந்தை மொழி
- மாதவராஜ்
- Apr 2
- 1 min read

அவன் அந்தச் செடியின் இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தான். அக்கா பார்த்து விடுகிறாள்.
“ஏன் இலைகளைப் பிய்த்துப் போடுகிறாய். இப்படிச் செய்யக் கூடாது என்று எத்தனை தடவை உனக்கு நான் சொல்லியிருக்கிறேன்” சத்தம் போட்டாள்.
இலைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“பார்...இந்தச் செடி அழுகிறது”. பாவம் போல குரலை வைத்துக் கொண்டு அவள் சொன்னாள்.
“செடி அழுகிறதா?”
“ஆமாம். அதுதான் கண்ணீர்”
அருகில் சென்றான். செடியின் காம்புகளில் பால் போன்ற திரவம் சொட்டிக்கொண்டிருந்தது. அவனது பிஞ்சு விரல்கள் அதைத் தொட்டுப் பார்த்தன. கன்னம் சுருங்க ஆரம்பித்தது. அண்ணாந்து அக்காவைப் பார்த்தான். அடிபட்டது போல முகம் துடித்தது. கண்கள் கலங்கின.
“அக்கா, இந்தச் செடியை சிரிக்க வையேன்”
“செடியை நீதான் அழ வைத்தாய். நீயே சிரிக்க வை.”
“எனக்கு சிரிக்க வைக்கத் தெரியலயே”.
அவன் சத்தமாய் அழ ஆரம்பித்தான்.
“அக்கா, ப்ளீஸ்... செடியை சிரிக்க வையேன்”
“காற்று வீசினால் செடி சிரிக்கும்.” அக்கா சொன்னாள்.
அவன் செடியை நோக்கி ஊதிவிட்டுக் கேட்டான். “அக்கா செடி சிரிக்கிறதா”.
Comments