top of page

கா... கா



“கா…கா..” 


இருள் முழுதும் விலகாத அதி காலையில்

உயரத்திலிருந்து கேட்கும் முதல் ஒலியாகவும்

ஒரு பூவின் மலர்தலை அறிவதாகவும்

அன்றைய நாளை துவக்கி வைப்பதாகவும்

உலகின் அழகைச் சொல்வதாகவும்

வீட்டு வாசலை திறப்பதாகவும்

மங்கிய சமையலறையின் பாத்திரச் சத்தங்களோடு

அம்மாவின் நினைவாகவும்

கேட்கிறது.

 

உச்சி வெயிலில்

நடந்து செல்லும் பாதையில்

பெருங் கூட்டத்தின் இடையிருந்து வரும் அழைப்பாகவும்

என்ன செய்யப் போகிறாய் என கேட்பதாகவும்

தூரத்தைச் சொல்லும் அறிவிப்பாகவும்

சுடு நெருப்பின் துளியாகவும்

கரகரத்த ஆணின் இருமலாகவும்

கேட்கிறது.

 

வெளிச்சம் மங்கிய மாலையில்

சிதறிய வண்ணங்களின் கவிதையாகவும்

இலைகளின் அசைவாகவும்

வெறுமையடர்ந்த வெளியின் ராகமாகவும்

மனதுக்குப் பிடித்த பெண்ணின் பாடலாகவும்

துரத்தில் லயிக்கும் மனதின் குரலாகவும்

கேட்கிறது.

 

எல்லாம் அடங்கிய இரவில்

தனிமையின் பெரும் தவிப்பாகவும்

ஆண் பெண் ரகசியங்களாகவும்

ஆதி மனித வேட்கையின் குறியீடுகளாகவும்

நிழல்களின் வேதனையாகவும்

தாயைத் தேடும் குழந்தையின் அழுகையாகவும்

கனவின் மொழியாகவும்

கேட்கிறது.

 

பறவை தன் இருப்பை

ஒருபோதும் சொல்வதில்லை

காலத்தைச் சொல்கிறது

நிறம் மாறும்

நம்மை நமக்குச் சொல்கிறது.

 

Comments


Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page